Wednesday 20 June, 2018

i am back

After 4 years of gap, found some time to get back to my  passion.

See you later


mommy returns

அப்பா ஒரு வழியாக திரும்பவும் ஏதாவது கிறுக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன். 

நான்கு ஆண்டுகள்........  எனவே தயக்கமாய் இருக்கு.   நிறைய நேரம் இருப்பதால் ஏதாவது கிறுக்க தோணுது.   தினம் ஒரு பக்கம் கிறுக்கலாம். விஷயமா இல்லை ...  கொட்டிக்கிடக்கே....

இன்னிக்கு இவ்வளவுதான்   ஸீ யூ லேட்டர் 

Friday 14 November, 2008

பரீட்சை

நவம்பர் 15 -இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது இந்த இனிய நன்னாளை. அன்றுதான் பூனைப் (CAT = Common Aptitude Test)
பரீட்சை எனப்படும் அகில இந்திய அளவிலான மானேஜ்மெண்ட் பரீட்சை. லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் இந்த பரீட்சையில் தேர்வு பெற்று, ஐஐஎம்மில் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மானேஜ்மெண்ட்) இடம் கிடைக்கப் பெறும் அதிருஷ்டசாலிகள் வெறும் 3000-4000 பேர் மட்டுமே. இந்தத் தருணத்தில் ஹிண்டுவில் வெளியாகியிருந்த ஒரு செய்தி என் மனத்தைக் கவர்ந்தது.

சியோலில் நேற்று அகில கொரிய மாநிலங்களுக்கான CSAT (College Scholastic Ability Test) நடைபெற்றது. (இந்த பரீட்சை இந்தியாவின் சி.இ.டி (காமன் எண்ட்ரன்ஸ் டெஸ்ட்) க்கு சமமானது). இதற்கான ஏற்பாடுகள்தான் பிரமாதம்.
பரீட்சை நடக்கும் இடமான இசியான் நகரத்தின் ஒரு உயர் நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் சரியான வேளைக்குச் செல்லும் வகையில் காலைப் போக்குவரத்துகளை மாற்றி அமைத்திருக்கின்றர். தொழிற்சாலைகள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பிற அலுவலகங்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் தாமதமாகத் திறக்கும்படி அரசாங்கமே உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்கள் சரியான நேரத்துக்கு பரீட்சை அரங்கத்துக்கு செல்ல முடிந்தது.

பரீட்சை அரங்கத்தின் வெளியே, வருங்கால மாணவர்களை பரீட்சை பயம் இல்லாமல் எழுதும்படி ஊக்குவித்தபடி அவர்களுக்கு காபி, தேனீர் கொடுத்து உபசரித்தனர் நிகழ்கால மாணவர்கள். இது தவிர, தத்தம் குழந்தைகளை பரீட்சை அரங்கத்தில் விட்டபின், அரங்கத்தின் வெளியே, மண்டியிட்டுப் ப்ரார்த்தித்துக் கொண்டிருந்த பெற்றோர்கள் ஏராளம்.

13 நிமிடங்களுக்கான கேள்வித்திறன் பரீட்சையில் மாணவர்களுக்குத் தெளிவாகக் கேட்க வேண்டும் என்பதற்காக, வாகனங்கள் அந்த சாலையில் 15 நிமிடங்களுக்குத் தடை செய்யப் பட்டன. இசியான் விமான நிலையத்தில் அந்த சமயத்தில் 7 விமானங்கள் தரையிறங்கும். ஒரு மாதத்திற்கு முன்பே, இந்த விமானங்கள் குறிப்பிட்ட நாளன்று, குறிப்பிட்ட சமயத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே தரையிறங்குமாறு, விமானப் பயண நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. கேள்வியாளரின் குரலைத்தவிர அந்த 13 நிமிடங்களுக்கு, வேறெந்த சத்தமும் கிடையாது.

ஜனாதிபதியின் நீல இல்லத்திலிருந்து, இந்த பரீட்சைக்குச் செல்லும் நீல இல்லத்தில் பணி புரிபவர்களின் குழந்தைகளுக்கு அரிசியில் தயாரித்த ஒரு வகை கேக் அளித்தார், அந்நாட்டின் முதல் பெண்மணியான கிம் யூங்க். இந்த அரிசி கேக்கின் ஒட்டும் தன்மையைப் போல் வெற்றி அந்தக் குழந்தைகளை ஒட்டிக் கொள்ளட்டும் என்ற வாழ்த்தோடு சாக்லேட் காண்டிகளையும் அளித்தார் கிம்.

இது தவிர, 14000 போலீஸ் அதிகாரிகளும், 4200 போலீஸ் வாகனங்களும், 6800 டாக்சிகளும் மாணவர்கள் சரியான் நேரத்துக்கு பரீட்சை அரங்கத்துக்கு வரும் ஏற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டன. கூடுதல் பஸ் வசதியும் அளிக்கப்பட்டது.

உல்சான் என்னும் நகரத்தில், பரீட்சைக்குப் படித்ததால் நேரம் கடந்து தூங்கிய மாணவர்களைச் சரியான நேரத்திற்கு பரீட்சை அரங்கத்திற்குச் சேர்க்க, 11 எமர்ஜென்சி வண்டிகளும், 22 காவலர்களும் அமர்த்தப் பட்டனர்.

ஹ்ம்ம்ம்ம், என்று வரும் இத்தகைய நிலை நம் நாட்டில்?..............................

Tuesday 30 September, 2008

நவராத்திரி

அப்பொழுது நாங்கள் ஒரு காலனியில் குடியிருந்தோம். அப்பா தொலைபேசித் தொழிற்சாலையில் வேலை பார்த்ததால் நாங்கள் அந்தத் தொழிற்சாலைக் குடியிருப்பில் குடியிருந்தோம். மொத்தம் எட்டு தெருக்கள். தினமும் பார்க்கும் முகங்கள் ஆனதால் எல்லோரும் ஒருவருகொருவர் ஏறக்குறைய பரிச்சயம். பண்டிகை என்றால் குழந்தைகளுக்கு கொண்டாட்டம்தான். அதுவும் நவராத்திரி என்றால் கேட்கவே வேண்டாம். பள்ளி விடுமுறை மட்டுமல்லாது விதவிதமான தின்பண்டங்கள்...... எங்கள் வட்டாரத்தில் மொத்தம் எட்டு வீடுகள். எட்டு வீட்டுக்கும் கொலு பார்க் கட்டும் வேலை எனது. நாலைந்து நாட்களுக்கு முன்னாலேயே எல்லார் வீட்டிலிருந்தும் ஒரு பெரிய தட்டு வாங்கி, அதில் ராகி அல்லது கடுகு பயிரிடுவேன்(அப்பொழுது நான் அந்த வீட்டுப் பிள்ளைகளை எப்படிப் படுத்துவேன் என்பதற்கு இன்னொரு கட்டுரை தேவைப்படும்.) கொலு ஆரம்பத்தன்று சின்ன சின்ன பயிர்கள் தயாராகியிருக்கும். பிறகு அவரவர் வீட்டில் இருக்கும் பார்க் பொம்மைகளுக்குத் தகுந்தாற்போல் பார்க் அமைப்பேன். எங்க வீட்டு பார்க் நன்றாக இருக்கணும் என்று எல்லா மாமிகளும் என்னைத் தனித்தனியாக கவனித்துக் கொள்வார்கள். என்னிடம் சமீபத்தில் வாலாட்டியவர்களை இந்த சந்தர்ப்பத்தில் நான் பழி தீர்த்துக் கொண்டதும் உண்டு. ஜானகி என்று ஒரு அக்கா. அவள் நவராத்திரி ஒன்பது நாளும் சலிக்காமல் எங்களுக்கு வித விதமாய் வேஷம் போடுவது அல்லாமல், ஜடை அலங்காரமும் செய்வாள். மத்தியானம் சாப்பிட்டவுடன் அலங்காரம் தொடங்கினால் கடைசி ஆள் ரெடியாகும் போது விளக்கு வைக்கும் சமயம் ஆகியிருக்கும்.
ஒரு ச்வாரச்யமான விஷயம். தினமும் அன்று அவரவர் வீட்டில் என்ன பலகாரம் என்று ஒற்றர் படை மத்தியானத்திற்குள் தகவல் தெரிவிக்கும். இப்பொழுது நினைத்தாலும் வாயில் நீர் ஊறுகிறது. வழக்கமான சுண்டல், மைதா மாவு பிச்கட், பொட்டுக்கடலையும், சர்க்கரையும் சேர்த்துப் பொடித்த மாவு (இதற்கு நாங்கள் இட்டிருந்த பெய்ர் பஃப்ஃ மாவு - வாயில் இந்த மாவைப் போட்டுக்கொண்டு பேசினால் பஃப் என்று எதிராளி மேல் தெறிக்கும்) கடலை உருண்டை, முறுக்கு, அப்பம் இன்ன பிற. அவரவர் வீட்டுத் தின்பண்டத்தைப் பொறுத்து எங்கள் படையெடுப்பு நடக்கும்.


உ-ம்: கடலைப்பருப்பு சுண்டல், காராமணி சுண்டல், பச்சைப் பருப்பு சுண்டல் வீடுகளைப் புறக்கணிப்போம் (அது எங்கள் வீடாக இருந்தாலும் சரி - நக்கீரர் பரம்பரையாக்கும்!!)


முறுக்கு, அப்பம், பிச்கட், கடலை உருண்டை வீட்டு மாமிகளுக்கு பிடித்தது சனி. "மாமி, நான் வரலை. என் தங்கைதான் / அக்காதான் / தம்பிதான் (அப்பா, அம்மாவை விட்டு வைத்தோமே என்று அவர்கள் சந்தோஷப்படுவார்கள்...) வந்தா. நான் இப்பொதான், சத்தியமா வரேன். இஷ்டமில்லேன்னா பரவாயில்ல மாமி, நான் போரேன்." என்று பல கலர் மெயிலும் நடக்கும். மாமிகளுக்கும் தெரியும், இது உதார் என்று. சுமார் ஐந்தரை மணிக்கு வித வித அலங்காரங்களுடன் எல்லார் வீட்டுக்கும் படையெடுப்போம். எங்கள் வீட்டிலிருந்து நான், தங்கைகள் இருவர், தம்பி ஒருத்தன் இவ்வளவுதான். எல்லார் கையிலும் இரண்டு மஞ்சள் பை (துணிக்கடையில் இலவசமாய் அளித்தது) - பலகார கலெக்ஷனுக்காக. ஒன்றில் சுண்டல் வகைகள், இன்னொன்றில் மற்றைய பலகாரங்கள் - "எல்லா சுண்டலையும் ஒண்ணா சேத்தா நாளைக்கு லக்ஷ்மிக்கு (எங்கள் வீட்டில் வேலை செய்பவள்) குடுக்கலாம்" பாட்டியின் ஐடியா. தெருவில் ராதையும், ஆண்டாளும், க்ருஷ்ணரும், சங்கராசார்யாரும், மஞ்சள் பையோடு போவது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல, எங்களுடைய பாட்டுக் கச்சேரி. விசாலம் மாமி மற்றும் சித்ரா மாமி (மாமி பேர் தெரியாது, மாமியின் பெண் பெயர் சித்ரா) எங்களுக்கு, ஒவ்வொரு நவராத்திரிக்கும் ஒரு புதுப் பாட்டு சொல்லிக் கொடுப்பார்கள். தப்பித்தவறி, யாராவது எங்களைப் பாடச் சொல்லிவிட்டால், அவ்வளவுதான், எங்களின் கோரசான குரலைக் கேட்டு கொலு பொம்மைகள் தூக்கம் கலைந்து பாட்டை நிறுத்தும்படி எங்களைக் கெஞ்சும். திருவையாறு தியாகராஜ ஆராதனையைத் தோற்கடிக்கும் எங்கள் பஜனை.

பாடி ப்ரசாதம் வாங்கிக் கொண்டு அடுத்த வீட்டுக்குப் போய் ... ரிபீட்ட்டேய்...... . எங்கள் ஊர்வலம் முடிந்து வீட்டில் சென்று அம்மா, பாட்டிக்கு யார் யார் வீட்டில் என்ன பலகாரம் என்று சொல்லவேண்டும். அப்போதானே அவர்கள் யார் வீட்டை முற்றுகை இடலாம் என்று ப்ளான் பண்ண முடியும் (எப்படி ஐடியா?)

ஒரு ரகசியம்.... பலகாரங்களில் சுண்டலைத்தவிர மீதியெல்லாம் வழியிலேயே காலியாயிருக்கும்.... ஆனா நாங்க யாருமே சாப்பிடலையே.... சத்தியமா.....

Monday 29 September, 2008

ஒருங்குறியில்

ஒரு வழியாக எனது இணய நண்பர் ஒருவர் மூலம் ஒருங்குறி எழுத்தினை என் லாப் டாப்பில் வரும் படி செய்துகொண்டிருக்கிரேன். ஜாலியாக இருக்கு. போகப் போகத்தான் தெரியும் என்னால் எவ்வளவு தூரம் டைப் செய்ய முடியும் என்று. இப்போதைக்கு சுலபமாக தோன்றுகிறது.

Saturday 27 September, 2008

முத்துச்சரத்தில் ஒரு முத்து

இன்று முத்துச்சரம் என்ற ஒரு இணையத்தளத்துக்கு போயிருந்தேன். பண்புடன் நண்பர் சுரேஷ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தளம் இது. ராமலக்ஷ்மி என்ற ஒரு அம்மையார் எழுதுகிறார். சரளமான, நகைச்சுவை இழையோட, எல்லா விதமான தலைப்புகளிலும் எழுதுகிறார் இவர். செப்டெம்பர் இதழில் இவர் மூன்று தலைப்புகளில் எழுதி இருக்கிறார். இவற்றில் தொலைக்காட்சிகளில் வரும் ரியாலிடி ஷோ பற்றிய இவரது கருத்துக்கள் அருமை. குழந்தைகளை போட்டியில் பங்கேற்கும் போது
வெற்றியை மட்டும் குறிக்கோளாய் கொள்ளக்கூடாது - பங்குபெறுதல் ஒரு நல்ல அனுபவம் என்ற உணர்வை அவர்களுக்கு ஊட்ட வேண்டும் என்று எழுதியிருந்தார். அருமை. இதை எல்லா தாய் மார்களும் படிக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

Sunday 21 September, 2008

இந்தக்காலத்து பசங்கள்

இந்த காலத்து பசங்களுக்குத்தான் என்ன மூளை? என்று சில சமயம் நினைக்கத்தோன்றுகிறது. நான் சிறு பிள்ளையாகி இருந்தபோது எனது பாட்டி சொன்ன கதைகளை அப்படியே நம்புவேன். பாட்டிக்கு எல்லாம் தெரியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை. இப்பொழுது என் மகன் அவன் பாட்டியிடம் கதை கேட்கும் பொழுது அடடா நமக்கு இதெல்லாம் தோன்ற வில்லையே என்று நினைத்துக்கொள்வேன். ராமாயணக்கதை - ராமன் தசரதர் சொல்படி காட்டுக்கு செல்கிறார். என் மகன் சொல்கிறான் - பாட்டி பார்த்தாயா, அப்பா பேச்சை கேட்டதால் தானே ராமன் கட்டுக்கு போகவேண்டி இருந்தது?
இன்னொரு முறை - இது ஐயப்பன் கதை - சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர் ஐயப்பன் என்று பாட்டி கூற விழுந்து விழுந்து சிரித்தான் இவன். ஏன் என்று பாட்டி கேட்க, பாட்டி உனக்கு ஒண்ணுமே தெரியலே. ஒரு ஆணும் இன்னொரு ஆணும் கல்யாணம் பண்ணிக்கலாம் ஆனால் குழந்தை பிறக்காது. அதுக்கு ஒரு ஆணும் ஒரு பெண்ணும்தான் கல்யாணம் பண்ணிக்கணும், என்றானே பார்க்கலாம். இடையில் நான் புகுந்து விஷ்ணு பெண்ணாக மாறும் திறமை உள்ளவர் என்றும் அவர் பெண்ணாக மாறும் சமயம் பிறந்தவரே ஐயப்பன் என்று கூறியதும் ஒரு மாதிரி ஒப்புக்கொண்டான். இன்னும் என்ன கேட்பானோ என்னை அந்த கடவுளர்கள்தான் காப்பற்ற வேண்டும்.