நவம்பர் 15 -இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது இந்த இனிய நன்னாளை. அன்றுதான் பூனைப் (CAT = Common Aptitude Test)
பரீட்சை எனப்படும் அகில இந்திய அளவிலான மானேஜ்மெண்ட் பரீட்சை. லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் இந்த பரீட்சையில் தேர்வு பெற்று, ஐஐஎம்மில் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மானேஜ்மெண்ட்) இடம் கிடைக்கப் பெறும் அதிருஷ்டசாலிகள் வெறும் 3000-4000 பேர் மட்டுமே. இந்தத் தருணத்தில் ஹிண்டுவில் வெளியாகியிருந்த ஒரு செய்தி என் மனத்தைக் கவர்ந்தது.
சியோலில் நேற்று அகில கொரிய மாநிலங்களுக்கான CSAT (College Scholastic Ability Test) நடைபெற்றது. (இந்த பரீட்சை இந்தியாவின் சி.இ.டி (காமன் எண்ட்ரன்ஸ் டெஸ்ட்) க்கு சமமானது). இதற்கான ஏற்பாடுகள்தான் பிரமாதம்.
பரீட்சை நடக்கும் இடமான இசியான் நகரத்தின் ஒரு உயர் நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் சரியான வேளைக்குச் செல்லும் வகையில் காலைப் போக்குவரத்துகளை மாற்றி அமைத்திருக்கின்றர். தொழிற்சாலைகள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பிற அலுவலகங்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் தாமதமாகத் திறக்கும்படி அரசாங்கமே உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்கள் சரியான நேரத்துக்கு பரீட்சை அரங்கத்துக்கு செல்ல முடிந்தது.
பரீட்சை அரங்கத்தின் வெளியே, வருங்கால மாணவர்களை பரீட்சை பயம் இல்லாமல் எழுதும்படி ஊக்குவித்தபடி அவர்களுக்கு காபி, தேனீர் கொடுத்து உபசரித்தனர் நிகழ்கால மாணவர்கள். இது தவிர, தத்தம் குழந்தைகளை பரீட்சை அரங்கத்தில் விட்டபின், அரங்கத்தின் வெளியே, மண்டியிட்டுப் ப்ரார்த்தித்துக் கொண்டிருந்த பெற்றோர்கள் ஏராளம்.
13 நிமிடங்களுக்கான கேள்வித்திறன் பரீட்சையில் மாணவர்களுக்குத் தெளிவாகக் கேட்க வேண்டும் என்பதற்காக, வாகனங்கள் அந்த சாலையில் 15 நிமிடங்களுக்குத் தடை செய்யப் பட்டன. இசியான் விமான நிலையத்தில் அந்த சமயத்தில் 7 விமானங்கள் தரையிறங்கும். ஒரு மாதத்திற்கு முன்பே, இந்த விமானங்கள் குறிப்பிட்ட நாளன்று, குறிப்பிட்ட சமயத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே தரையிறங்குமாறு, விமானப் பயண நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. கேள்வியாளரின் குரலைத்தவிர அந்த 13 நிமிடங்களுக்கு, வேறெந்த சத்தமும் கிடையாது.
ஜனாதிபதியின் நீல இல்லத்திலிருந்து, இந்த பரீட்சைக்குச் செல்லும் நீல இல்லத்தில் பணி புரிபவர்களின் குழந்தைகளுக்கு அரிசியில் தயாரித்த ஒரு வகை கேக் அளித்தார், அந்நாட்டின் முதல் பெண்மணியான கிம் யூங்க். இந்த அரிசி கேக்கின் ஒட்டும் தன்மையைப் போல் வெற்றி அந்தக் குழந்தைகளை ஒட்டிக் கொள்ளட்டும் என்ற வாழ்த்தோடு சாக்லேட் காண்டிகளையும் அளித்தார் கிம்.
இது தவிர, 14000 போலீஸ் அதிகாரிகளும், 4200 போலீஸ் வாகனங்களும், 6800 டாக்சிகளும் மாணவர்கள் சரியான் நேரத்துக்கு பரீட்சை அரங்கத்துக்கு வரும் ஏற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டன. கூடுதல் பஸ் வசதியும் அளிக்கப்பட்டது.
உல்சான் என்னும் நகரத்தில், பரீட்சைக்குப் படித்ததால் நேரம் கடந்து தூங்கிய மாணவர்களைச் சரியான நேரத்திற்கு பரீட்சை அரங்கத்திற்குச் சேர்க்க, 11 எமர்ஜென்சி வண்டிகளும், 22 காவலர்களும் அமர்த்தப் பட்டனர்.
ஹ்ம்ம்ம்ம், என்று வரும் இத்தகைய நிலை நம் நாட்டில்?..............................